ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர். வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர். உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.
செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை. இன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன. ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில் இன இழிவு நீங்கியதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
டாக்டர் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா? அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பெளத்த மதத்திற்கு போயிருப்பாரா? அங்கேயாவது அவருக்கும் அவருடன் பெளத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா? இல்லையே! நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது இன இழிவு நீங்கியபாடில்லை.
அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா? அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித? படுத்தியக் கொடுமையை நாடே அறியும். MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.
இந்த நிலையில் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார். அதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா? இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல; இன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.
No comments:
Post a Comment