ஆண்டவர் முதல் மனிதர் ஆதாமைப் படைத்ததிலிருந்து தொடர்ச்சியாக அனுப்பிய தீர்க்கதரிசிகளின் வாயிலாகவும் அவர்களில் சிலருக்கு அவர் இறக்கியருளிய பரிசுத்த வேதாகமங்களிலும் அவன் போதித்த முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. அது தான் ‘ஆண்டவர் ஒருவரே! வணங்குவதற்கு தகுதியானவர் அவரைத் தவிர வேறுயாருமில்லை’ என்பதாகும்.
ஒவ்வொரு முறையும் மக்கள் வழிதவறி அந்த ஒரே ஆண்டவரை வணங்குவதற்குப் பதிலாக ஆண்டவருடைய மற்ற படைப்பினங்களாகிய மனிதர்களையும் அந்த மனிதர்களின் உருவங்களில் உள்ள சிலைகளையும் வணங்க முற்பட்ட போது ஆண்டவர் அவ்வப்போது புதிய தீர்க்கதரிசிகளை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார்.
அந்த தீர்க்கதரிசிகளும் ‘வணக்கத்திற்கு தகுதியானவர் ஒரே ஆண்டவரைத் தவிர வேறில்லை’ என்றும் ‘அவரைத் தவிர மற்றவர்களை வழிபடுபவர்கள் எல்லாம் நரகத்திற்கு செல்வார்கள்’ எனவும் எச்சரிக்கைகள் செய்து அந்த ‘ஒரே ஆண்டவரையே’ வணங்குமாறு கூறினர்.
தீர்க்கதரிசிகளான நோவா, ஆபிரஹாம், மோஸஸ், ஜீஸஸ் இவர்களும் இதையே போதித்தனர். இந்த வரிசையில் இறுதியாக வந்த தீர்க்கதரிசியான முஹம்மது நபியும் (ஸல்) இந்த ஒரே ஆண்டவரை வணங்க வேண்டும் என்ற இந்தச் செய்தியையே கூறினார்.
ஆண்டவர் அந்த தீர்க்கதரிசிகளுக்கு இறக்கிய பரிசுத்த வேதாகாமங்களிலும் இந்த ஓரிறைக் கொள்கையே போதிக்கப்பட்டது. அந்த வரிசையில் ஆண்டவர் இயேசு நாதருக்கு அருளிய வேதத்திலும், ‘ஆண்டவர் ஒருவரே’ என்ற செய்தி வலியுறுத்தப்பட்டது.
ஆரம்பக்காலத்தில் வாழ்ந்த இயேசுவைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள், இயேசு நாதர் போதித்த ‘ஆண்டவர் ஒருவரே’ என்ற கொள்கையையே பின்பற்றி வந்தனர். ஆனால் காலப்போக்கில் இயேசு நாதர் போதித்த இந்த ஓர் இறைக் கொள்கையும் சிதைந்து ‘ஆண்டவர் மூவரில்’ இருக்கிறார் என்ற ‘திரித்துவக் கொள்கை’ (Concept of Trinity) கிறிஸ்தவ மார்க்கத்தில் புதியதாக உருவாகியது.
பைபிள் மற்றும் கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, இயேசு கிறிஸ்து பிறப்பிற்கு 329 ஆண்டுகளுக்கு பிறகே எகிப்து நாட்டின் அலெக்ஸ்ஸாண்டரியா நகரைச் சேர்ந்த அதானாசியஸ் என்பவரால் கிறிஸ்தவர்கள் தற்போது பின்பற்றுகின்ற ‘முக்கடவுள்‘ கொள்கையான ‘திரித்துவக் கொள்கை’ உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
ஆனால் உண்மையில்,
ஆண்டவர் ஒருவரே,
அவரே இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள கோடானு கோடி உயிரினங்களையும் படைத்துப் பரிபாலித்து வருகிறார்,
அவரே பிறப்பையும், இறப்பையும் படைத்தார்,
உலகில் உள்ள சகலமும் அவருக்கு கட்டுப்படுபவையாக இருக்கின்றன,
அவரைக் கேள்வி கேட்பவர் யாருமில்லை! அவர் நாடியவைத் தண்டிப்பார், அவர் நாடியவரை மன்னிப்பார்,
அவரைப் போல் இந்த உலகில் எதுவும் இல்லை!
அவருக்கு ஊண், உறக்கம் எதுவும் தேவையில்லை!
கிறிஸ்தவ சகோதர சகோதரிகள், ‘நாங்களும் ஆண்டவர் ஒருவர் என்று தானே கூறுகிறோம்’ எனலாம். ஆனால் அவர்களிடம் சற்று விளக்கமாகக் கேட்போமேயானால் அவர்கள் கூறுவது.
பிதாவும் கடவுள்,
அவருடைய மகனும் கடவுள்,
புனித ஆவியும் கடவுள்.
ஆனால் அவர்கள் மூன்று கடவுள்களில்லை; மாறாக ஒரு கடவுள்!
என்று புதிய கணக்கு ஒன்றைக் கூறுவார்கள். மேலும் அவர்களிடம் இந்த மூவரின் வேலைகள் யாவை என்று கேட்டால்,
பிதாவின் வேலை - படைப்பது (Creator),
மகனின் வேலை - நரகத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பவர் (Savior)
பரிசுத்த ஆவியின் வேலை - தூதுத்துவம் (Counselor)
என்று கூறுவார்கள். இந்த வகையில் அவர்கள் ‘ஆண்டவர் ஒருவர் தான்’ என்று கூறினாலும் அவருடைய தன்மைகளை பிறருக்கு பங்கிடுவதன் மூலம் மூன்று ஆண்டவர்களை வழிபடுகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.
கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேத நூலாகிய பைபிளோ இவர்களின் இந்த ‘மூன்று கடவுள் கொள்கையை’ நிராகரித்து ஆண்டவர் ஒருவரே என்று பறை சாற்றுகிறது.
பைபிள் கூறுகிறது: -
“என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” (யோவான் 5:37)
“ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (I தீமோத்தேயு 6:16)
“நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்”(யாத்திராகமம் 33:20)
என தருமை கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே! சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்! இயேசு கிறிஸ்து உயிரோடு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்களில் அவர் வசித்த பகுதியில் உள்ள மக்களில் அநேகர் இயேசுவைக் கண் கூடாகப் பார்த்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால் மேற்கூறிய பைபிளின் வசனங்கள் யாவும் ‘ஆண்டவரை ஒருவரும் பார்க்க முடியாது’ என்று கூறுகிறதே! ஆனால் நாம் ‘இயேசு தான் ஆண்டவர்’! ‘ஆண்டவர் தான் இயேசு’ என்று கூறுகிறோமே! இன்றைய கிறிஸ்தவர்களின் இந்த
திரித்துவ சித்தாந்தம் பைபிளின் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக இருக்கின்றனவே! அப்படியென்றால் ஆண்டவரைப் பற்றிய உண்மையை மறைப்பதன் இரகசியங்கள் ஏதாவது இருக்கிறதா?
மேலும் ஆண்டவர் கூறுகிறார்: -
“நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்” (ஏசாயா 45:19)
மேலும் பைபிளின் அநேக வசனங்கள் ‘ஆண்டவர் ஒருவரே’ என்றும் கூறுவதை நாம் காணமுடிகிறது.
ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் பழைய ஏற்பாடு: -
“இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (உபாகமம் 6:4)
“நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை” (ஏசாயா 43:10-11)
“நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்” (ஏசாயா 44:6)
“நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். (ஏசாயா 45:21-23)
ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் புதிய ஏற்பாடு: -
“அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” (மத்தேயு 19:16-17)
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3)
“அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்” (மத்தேயு 4:10)
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)
“தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே” (I தீமோத்தேயு 2:5)
இதுவரை பைபிள் கூறும் ‘ஆண்டவர் ஒருவரே’ என்பதைப் பார்த்தோம்! இனி அண்டவர் அவருடைய இறுதி தீர்க்கதரிசி முஹம்மது நபி (ஸல்) மூலம் மனித குலத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக அருளிய இறுதி வேதமாகிய குர்ஆனில் ‘ஆண்டவர் ஒருவரே’ என்பது குறித்து என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
“(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை” (குர்ஆன் 112:1-4)
“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: ‘நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்’ என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை” (குர்ஆன் 21:25)
“நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்” (குர்ஆன் 5:73)
“இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்” (குர்ஆன் 27:61)
“கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய ‘ரஹ்மத்’ என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்” (குர்ஆன் 27:63)
“முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன்
இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: ‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.’” (குர்ஆன் 27:64)
ஆண்டவருடைய இறுதி வேதத்தின் வசனங்களும் இது போல பைபிளின் இன்னும் ஏராளாமான வசனங்களும் போதிப்பது என்னவென்றால், ‘ஆண்டவர் ஒருவரே! அவரைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவர் வேறு யாருமில்லை’ என்பதாகும்.
ஆன்டவர் கூறுகிறார்: -
“பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை” (ஏசாயா 45:22)
“நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. (ஏசாயா 43:10-11)
எனதருமை கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே! ‘ஆண்டவர் ஒருவரே’ என்று பைபிளின் மேற்கண்ட வசனங்களைப் படித்துக் கொண்டே ‘ஆண்டவர் மூவரில் இருக்கிறார்’ என்று கூறுவது மேற்கண்ட பைபிளின் வசனங்களை நிராகரித்தற்கு ஒப்பாகும் என்பதை நாம் உணர வேண்டும்.
தீர்க்கதரிசகளான ஆதாம், நோவா, ஆபிரஹாம், மோஸஸ் ஆகியவர்களின் வரிசையில் அந்த ஆண்டவரால் அனுப்பப்பட்டவர் தான் இயேசு நாதரும் ஆவார். அவர் கண்ணியமிக்க ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை.
அவருக்கு அடுத்ததாக வந்த இறுதி தூதர் தான் முஹம்மது நபி (ஸல்) ஆவார். அந்த தீர்க்கதரிசிகள் அனைவரும் போதித்தது தான் ‘ஆண்டவர் ஒருவரே’ என்பதாகும்.
சிந்திப்போம்! செயற்படுவோம்.
தொடர்புடைய ஆக்கங்கள்:
அல்-குர்ஆனும், கிறிஸ்தவர்களும்!
அன்னை மேரி மற்றும் இயேசு நாதர் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி!
சாட் ரூம் (chat room) வழியாக ஷஹாதா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!
பைபிளின் வரலாறு - Dr Bart Ehrman : Part 5 - (Video in English)
No comments:
Post a Comment