அரசனும், பக்கிரியும் ஒன்றாக....

"முஸ்லிம்" தோழர்கள் நம்மைப் போல், தங்களுக்குள்ளேயே மிகுந்த ஜாதிவேற்றுமை பாராட்டிக் கொள்வதில்லை. நாம் நம்மைச் சேர்ந்த இந்துக்களிலேயே பலரை தெருவில் நடக்க விடாமலும், கோயில்களுக்குள் நுழைய விடாமலும், குளம், கிணறுகளில் தண்ணீர் முகக்க விடாமலும், பள்ளிக் கூடங்களில் கல்வி பயில விடாமலும் தடுப்பது போல, அவர்கள் எந்த "முஸ்லிம்" சகோதரரையும் தடுப்பதில்லை. "முஸ்லிம்" என்று சொல்லக்கூடியவர்கள் எவராயிருப்பினும் அவர்களுடன் உடன் பிறந்தார் போல நடந்து கொள்ளுகின்றனர். அவர்களுடைய "மசூதி"களில் சிறிதும் வேறுபாடு இல்லாமல் அரசனும், பக்கிரியும் ஒன்றாக மண்டியிட்டு வணங்குகின்றனர்.

அன்றியும், அவர்களுடைய பெண்களுக்கும், ஆண்மக்களைப் போலவே எல்லா உரிமைகளையும் தாராளமாக அம்மதம் வழங்கியிருக்கின்றது. விதவா விவாகம் புரிந்து கொள்ளலாம்; விவாக விடுதலை செய்து கொள்ளலாம்; ஆண்மக்களைப் போலவே பெண்மக்களுக்கும் சொத்துரிமை உண்டு.

குடிப்பழக்கம் என்பது எள்ளளவும் அவர்களிடம் இல்லை. அதை மதம் மிகவம் வன்மையாகக் கண்டித்து ஒதுக்குகின்றது. அன்றியும், நம்மைப் போன்று "விக்கிரக ஆராதனம்" செய்யாத காரணத்தால் குடிப்பழக்கம் ஏற்படுவதற்கே இடமில்லாமலும் ஒழித்து விட்டது என்றே கூறலாம்.

மேற்கூறிய சிறந்த கொள்கைகள் இன்றும் "இஸ்லாம் மார்க்க"த்தில் நிலை பெற்று இருக்கும் காரணத்தால், அதைப் பின்பற்றும் மக்கள் வரவர வளர்ச்சியடைந்தும், செல்வத்திற் சிறந்தும் உயர்ச்சியடைந்து வருகின்றனர்.
..........................................

"இந்து மதத்தில் கை வைக்கக்கூடாது" என்று கூறும் "பக்தர்"களைச் சில கேள்விகள் கேட்கிறோம். அவற்றிற்கு விடையளித்து விட்டுப் பிறகு நாம் கூறுவது தவறு என்று காட்டினால் மிகவும் வணக்கத்துடன் ஏற்றுக் கொள்ளுகிறோம்.

எத்தனை காலமாக நாம் இந்துமதத்தைப் பின்பற்றி வருகின்றோம்? இந்து மதத்திற்காக இதுவரையிலும் எத்தனை கோடி ருபாய்கள் செலவு செய்திருக்கிறோம்? இப்பொழுதும் ஒவ்வோராண்டும் எவ்வளவு ருபாய் செலவு செய்து கொண்டு வருகின்றோம். இருபத்து மூன்று கோடி இந்துக்களுக்கு முப்பத்து மூன்று கோடி தேவர்கள் தெய்வமாக இருக்கின்றார்களே, இவர்களெல்லாம் ஏன் இந்துக்களின் கஷ்டங்களை நீக்க முன்வரக்கூடாது?

இந்தியாவில் மிகப் பெரும்பாலான மக்களாயிருக்கும் இந்துக்கள் ஒற்றுமையாயிருந்தால், வேற்று நாட்டினர் இப்பொழுது இந்தியாவைப் பிடித்து அரசாள முடியுமா? இவ்வித ஒற்றுமை இந்துக்களுக்குள் ஏற்படாமல் போனதற்குக் காரணம் இந்துமதத்தில் உள்ள சாதி வேற்றுமையல்லவா? இந்துக்கள் நாளுக்கு நாள் வறுமையில் மூழ்குவதற்குக் காரணம் அவர்கள் வருந்தி ஈட்டும் செல்வத்தைப் பண்டிகைகள் கொண்டாடுவதும், கோயில்களுக்குச் செலவிடுவதும், நன்மை தீமைக்கான பல சடங்குகளில் செலவழிப்பதும் அல்லவா?

அன்றியும், இந்துமதம் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா? இந்து மதத்திற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால் வேதம் என்று சொல்லுவீர்களானாலும், அந்த வேதத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா? பிராமணரைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வேதத்தைப் படிக்கவாவது உரிமையுண்டா? முஸ்லிம் மத வேதமாகிய "குரானை" இன்னார் தான் படிக்கலாம்; இன்னார் படிக்கக் கூடாது என்று அம் மதத்தில் இருக்கிறதா? எல்லா முஸ்லிம்களுக்கும் அவர்களுடைய வேதத்தைப் படிக்க உரிமையிருக்கிறதே! அதுபோல, இந்து மதத்தில் ஏன் இல்லை?


ஆனால், இந்துமதத்தில் ஏன் பார்ப்பனர்கள் மாத்திரம் வேதங்களைப் படிக்கலாம்; மற்றவர்கள் படிக்கவும் கூடாது; படிப்பதைக் கேட்கவும் கூடாது; படித்தால் நாவையறுக்க வேண்டும்; படித்ததைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று ஏன் கட்டளையிடப்பட்டிருக்கிறது? இதனால் இந்து மதம் என்பது பார்ப்பன மதம் அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஏற்பட்ட மதம் என்பது தெரியவில்லையா? என்று தான் கேட்கிறோம். இக்கேள்விகள் நியாயமான கேள்விகளா? அல்லவா? என்று ஆராயுங்கள்!

தந்தை பெரியார் . "குடிஅரசு" – 04-09-1932.

No comments:

Post a Comment