இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
இறைத்தூதர் முஹம்மது அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல் ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து "மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது "கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, "பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள். அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள். நபி அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது.
கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)
No comments:
Post a Comment