இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்களின் இறுதிப் பேருரை!!கருப்பரும்,வெள்ளையரும் சமமே!!! பாகம் 2

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

No comments:

Post a Comment