என்றும் பிரச்னை

எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் பாத சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா: பேஷனுக்காகத் தான் பெண்கள் ஹீல்ஸ் அணிகின்றனர். ஆனால், அது அவர்களுக்கு வசதியாகவும், ஆபத்து இல்லாமலும் இருக்க வேண்டியது முக்கியம். பொதுவாக, ஒன்றரை இன்ச் அளவுக்கு கீழ் உள்ள ஹீல்சைப் பயன்படுத்தலாம். இதனால், பாதிப்புகள் இருக்காது. அதற்கு மேல் அணியும் போது தான், உடல் அவதிகள் வரிசை கட்டும். ஹை ஹீல்சின் பாதிப்பு, நம் நடையின் இயல்பான சாயலையே மாற்றிவிடும். நார்மலாக பெண்களின் இடை, "எஸ்' வடிவ வளைவுகளுடன் இருக்கும். ஆனால், தொடர்ந்து ஹீல்ஸ் அணிபவர்களுக்கு அந்த வளைவு மாறும். இடுப்புத் தசைகள் இறுகுவதுடன், கால் முட்டி முன்பக்கமாக வளைந்து காணப்படும். நம் பாதம் முன்பகுதியான, "போர் புட்' நடுப்பகுதியான, "மிட் புட்' மற்றும் பின் பகுதி, "ஹைண்ட் புட்' என, மூன்று பகுதிகள் ஒருங்கிணைந்தது. காலணி அணியும் போது, முன் பகுதி நன்றாக அசையக்கூடிய வகையிலும், நடுப்பகுதி நல்ல சப்போர்ட்டுடனும், பின் பகுதி வசதியாகவும் காலணிக்குள் பொருந்த வேண்டும். முக்கியமாக, பாதத்தின் ஆர்ச் பகுதியை நன்றாகப் பிடித்துக் கொள்ளும்படி இருக்க வேண்டும். அப்போது தான், உடம்பின் எடையை, பாதம் பேலன்ஸ்டாக தாங்க வசதியாக இருக்கும். ஆனால், ஹை ஹீல்ஸ் அணியும் போது, மொத்த உடல் எடையில், 75 சதவீதம் முன் பாதத்தில் இறங்கிவிடும். அதனால், முன் பாதத்தில், ஆணிக்கால், காய்ப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், குதிகால் பாதிப்புடன், ஆடுதசை பகுதியும் இறுக்கமாகலாம். தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்தும் போது, முழங்கால் மூட்டின் உள்பகுதியான, "மீடியல் கம்பார்ட்மென்ட்' தேய்மானம் ஏற்படும். ஒரு கட்டத்தில், முழங்கால் மூட்டில் தேய்மானம் அதிகமாவதுடன், முதுகுப் பகுதியிலும் எலும்பு தேய வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவுகள், உடல் இயக்கத்தையே சிரமப்படுத்தும். மொத்தத்தில், விசேஷங்களுக்கு ஓரிரு மணி நேரம் வரை ஹீல்ஸ் அணியலாம்; தவறு இல்லை. தினமும் உபயோகப்படுத்துவதற்கு, 10 மில்லி மீட்டர் உயரம் கொண்ட செப்பல்கள் தான் சிறந்தது.

No comments:

Post a Comment