விருகம்பாக்கம் மர்க்கெட் அருகே காளியம்மன் கோவில் தெருவில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் 133-வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 8.30 மணி அளவில் சுப.வீரபாண்டியன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் ஒரு கல் வந்து விழுந்தது. இதனால் வீரமணி உள்ளிட்ட தி.க. நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கல்வந்த திசை நோக்கி தி.க. தொண்டர்கள் 10 பேர் சென்று பார்த்தனர். அங்கு யாரும் இல்லை. பின்னர் சிறிது நேரம் கூட்டம் அமைதியாக நடந்தது. சுப.வீரபாண்டியன் பேசிவிட்டு அமர்ந்ததும், கி.வீரமணி பேசத் தொடங்கினார். அவர் பேசும் போது, இந்து முன்னணியினருடன் கருத்து மோதலுக்கு திராவிடர் கழகம் தயாராக உள்ளது என்று கூறினார்.
அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென வன்முறை மூண்டது. இந்து முன்னணியை சேர்ந்த 20 பேர் மேடை அருகே கட்டப்பட்டிருந்த டியூப்லைட்டுகளை அடித்து உடைத்தனர். திராவிடர் கழகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே மேடையை நோக்கி அவர்கள் முன்னேறினர்.
திராவிடர் கழகத்தினரும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட் டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இந்து முன்னணியினரை விரட்டியடித்தனர். இந்த கல்வீச்சு மற்றும் மோதலில் இந்து முன்னணியை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் காயம் அடைந்தார்.
போலீசாரின் தலையீட்டால் நிலைமை சீரானது, வீரமணி பேசி முடித்தார். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வட பழனி உதவி கமிஷனர் சீனிவாசன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் செந்தில், இளங்கோ, லிட்டில், தயாளன், நாகேந்திரன், இன்னொரு செந்தில் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். தி.க. தரப்பில் தமிழ், ஏழுமலை, நடராஜன், அரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment