சவூதி பெண்மணி துராயா அஹ்மத் அல்-உபைத் ஜப்பான் அரசின் உயரிய “உதய சூரியன் விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்நல நிதியத்தின் (UNFPA) செயல் தலைவராகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர் துராயா.
இது குறித்து ஜப்பானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் “பன்னாட்டு அளவில் பெண் முன்னேற்றத்தினை முன்னெடுத்தமைக்காகவும் இளந்தலைமுறையினர் வாழ்வுநிலை சிறப்புற, நன்கு பங்களித்தமைக்காகவும் பெருமைமிகு “உதயசூரியன்” விருதை (Grand Cordon of the Order of the Rising Sun) திருமதி.துராயாவுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
“ஐக்கிய நாடுகள் அவையில் தனது நீண்ட பணிக்காலத்தில், திருமதி,துராயா, கலாச்சார, மத விழுமங்களின் அடிப்படையில் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார்” என்று சவூதி அரேபியாவுக்கான ஜப்பான் தூதர் சிகெரு எண்டொ ரியாத்தில் செவ்வாயன்று குறிப்பிட்டார். “இருநாடுகளின் நல்லுறவுக்கு அவர் செய்த பாரிய பங்களிப்பு மறக்கக்கூடியதல்ல” என்றார் ஜப்பான் தூதர்.

2008ல் ஹொக்கைடொ டோக்யொ கருத்தரங்கில் மகப்பேறு, குழந்தைநலம், மற்றும் மானுடக் காப்பு திட்டங்களை அவர் முன்னெடுத்தார் என்பதை ஜப்பான் தூதர் நினைவுகூர்ந்தார்.
அக்டோபர் 9ல் ஜப்பான் தூதரகத்தில் நடைபெறும் விழாவொன்றில் இந்தச் சிறப்பு விருது திருமதி. துராயாவுக்கு வழங்கப்படும் என்றும் தூதர் குறிப்பிட்டார்.
ஐ.நா அவையின் மக்கள் நலநிதியத்தின் செயல் இயக்குநராகப் பத்தாண்டு காலம் (2000-2010) பணியாற்றிய திருமதி. துராயா, சர்வதேச அளவில் பல பதவிகளை வகித்துள்ளார். 1963ல் அமெரிக்கப் பல்கலைகழகம் சென்று பயில சவூதி அரசின் உதவித்தொகை பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment