கஞ்சாவை கொண்டு சாக்லெட் தயாரித்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே புழக்கத்தில் விட்ட வேலூரை சேர்ந்தவர், "குண்டர்'சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
உலக போதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில், சி.பி.சி.ஐ.டி.,யின் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஐ.ஜி., ஆபாஷ்குமார் உத்தரவின்படி,டி.எஸ்.பி.,க்களை தலைமையாக கொண்டு ஏழு தனிப்படை போலீசார் இந்த சோதனையில் கலந்துகொண்டனர். அவர்கள் நடத்திய சோதனையில் பீடி, சிகரெட் மற்றும் பீடாவில் கஞ்சாவை கலந்து விற்பனை செய்ததாக மூவர் பிடிபட்டனர். அதில்,வேலூரை சேர்ந்த ஆனந்தன் (32) என்பவர் முக்கியமானவர். இவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி,கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் இந்த கஞ்சாவை சாக்லெட் வடிவில் விற்பனை செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா சாக்லெட்டை தயாரித்து வினியோகிப்பது ஆனந்தன் என்பது தெரியவந்தது. கஞ்சாவை நன்றாக அரைத்து அதில், அதிகளவு சர்க்கரை கலந்து சாக்லெட் போன்று தயாரித்து அவற்றை பழைய சாக்லெட் கவர்களில் அடைத்து வினியோகித்துள்ளார். இவற்றை புரோக்கர்கள் மூலம்,கடைகளில் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து,தனிப்படையினர் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரியின் முன்புள்ள கடைகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.
சோதனையில் எழும்பூரை சேர்ந்த முருகேசன் என்பவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்ததுடன், 10ஆயிரம் கஞ்சா சாக்லெட்டையும் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆனந்தன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்குகள் உள்ளதால் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
போதைப் பொருள் சோதனை குறித்து, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு டி.ஐ.ஜி., ஆறுமுகம் கூறியதாவது: இவர்கள் விற்பனை செய்த போதை சாக்லெட்டை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் வாங்கி பயன்படுத்தியுள்ளனர். சிறிய அளவு சேர்த்தால் கூட அதிக போதை தரும் வகையில் சாக்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற போதை சாக்லெட் விற்பனை செய்யப்பட்டால், 2234 1513 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், கட்டுப்பாட்டு அறையில் தகவல் தெரிந்தவுடன் சோதனைக்கு செல்வதற்காக தனிப்படை போலீசார் தயாராக உள்ளனர். போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். இவ்வாறு ஆறுமுகம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment