குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டும்; அதற்கு முதலில் பெற்றோர் பாடப்புத்தகங்களைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.
படிக்கப் படிக்கத்தான் சொற்களின் புழக்கம் அதிகரிக்கும். உலகளாவிய விஷயங்கள் தெரியவரும். தன்னை உணரும் ஆற்றலும் வரும். ஆனால்,வாசிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை வயதானபின் உபதேசிப்பதில் பயனில்லை. வாசிக்கும் பழக்கம் என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாக வேண்டும். அதற்குப் புத்தகங்கள் படிப்பதன் அவசியத்தை குழந்தைகளிடம் பெற்றோர் உருவாக்க வேண்டும்.
பள்ளியில் படித்து பெறும் பட்டங்களினால் கிடைக்கும் பெருமையைவிட பாடப்புத்தகங்களுக்கு அப்பாலுள்ள புத்தகங்களை வாசிப்பதால் கிடைக்கும் அறிவு விசாலமானது. இதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்''
வாசிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் ஏராளமான நூலகங்கள் இருக்கின்றன. குழந்தைகள் புத்தகங்களை வாசிக்க பெற்றோர்கள் உதவ வேண்டும்.
பொருளாதார ரீதியாக மிக வளர்ச்சி கண்ட, அதேசமயம் மனித உறவுகள் குலைந்த சிலரிடம் அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் கிடைத்த உண்மை என்ன தெரியுமா? இப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் ஆங்கிலவழிக் கல்விமுறையில் பயின்றவர்கள்; பாடப்புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள்.
நாம் நம் குழந்தைகளை எப்படி வளர்க்க எண்ணுகிறோம்? கஷ்டமே தெரியாமல் வளர்க்க எண்ணுகிறோம். அவர்கள் பிரியப்படுவதையெல்லாம் வாங்கித் தருவதன் மூலம் பணத்தை விட்டெறிந்தால் எதுவும் கிடைக்கும் என்று அவர்கள் மனதில் பதியவைக்கிறோம். இப்படியாக, வாழ்க்கையின் உண்மையான முகம் தெரியாமல் அவர்களை வளர்க்கிறோம். இப்படி வளரும் குழந்தைகள் எப்படி வளரும்? அறிவுடன் வளர்கின்றன. ஆனால்,அவர்களிடம் துளியும் அறவுணர்வு இல்லை. நாளை அது நம்மையே பாதிக்கிறது.
பெற்றோர்கள் தயவுசெய்து பாடப்புத்தகங்களைத் தாண்டிச் சிந்தியுங்கள். பாடப்புத்தகங்களால் அறிவை மட்டுமே தர முடியும். அவற்றைத் தாண்டிய ஏனைய புத்தகங்களால்தான் அறவுணர்வைத் தர முடியும். புத்தகங்கள் உங்கள் குழந்தைகளைப் படிப்பாளிகள் ஆக்குகின்றன;படைப்பாளி ஆக்குகின்றன; அவர்களை அறவுணர்வு மிக்க மனிதர்களாய் உங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் உருமாற்றி அளிக்கின்றன''
உலகின் மிகப் பெரிய வரலாற்று புருஷர்கள் எவரையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் வரலாற்று புருஷர்களாக மாறியதற்குப் பின் ஒரு புத்தகம் இருந்திருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கும். நாம் நம் குழந்தைகளை வரலாற்று புருஷர்களாகப் பார்க்கவே விரும்புகிறோம். ஆனால், அதற்கான அடிப்படையை ஏன் அவர்களுக்குக் கொடுக்க மறுக்கிறோம்?'' எனவே வீட்டிற்கு ஒரு நூலகம் அமைத்து நம் பிள்ளைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை அவசியம் வளக்க வேண்டும்.
தற்போது மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெற முடியாது. இதர மென்திறன் திறமைகளை கல்வி பயிலும்போதே வளர்த்துக் கொள்வது அவசியம்.
மாணவர்கள் வெறும் மதிப்பெண்களால் மட்டும் வாழ்வில் உயர்நிலையைப் பெற்றுவிட முடியாது. அதற்கும் மேலாக பல்வகைத் திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக்கொண்டால் மட்டுமே முன்னேற முடியும். மாணவர்கள் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்ற ஒரே நாடு உலகில் இந்தியா மட்டுமே. மற்ற நாடுகளில் ஆங்கில மொழிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆனாலும் பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்வதில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். வேலைவாய்ப்புகளை வழங்க முன்வரும் நிறுவனங்கள் மாணவர்களின் கல்வித்திறனை மட்டும் எதிர்பார்க்காமல், இதர திறன்களையும் எதிர்பார்ப்பதால் கல்லூரி வளாகங்களில் நடத்தப்படும் வேலைக்கான முகாமில் 80 சதவிகித மாணவர்கள் வெற்றி பெற முடியாத சூழல் உள்ளது. பாடப் புத்தகத்தைத் தவிர,மற்றவர்களுடன் உரையாடும் திறன்,படைப்பாற்றல் திறன்,சுயக் கட்டுப்பாட்டுத் திறன்,மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் திறன்,சகிப்புத்திறன் உள்ளிட்ட பன்முகத் திறன்களையும் வளர்த்துக் கொள்ளும் மாணவர்களே வாழ்வில் உயர்ந்த இடத்தைப்பெற முடியும்.
No comments:
Post a Comment