ஐ.ஐ.டி., படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் சீனியர் ஐ.ஐ.டி., மாணவி அபர்ணா: ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு எழுதுவற்கு முதல் தேவை, அதைப் பற்றிய தெளிவான புரிதல். ஐ.ஐ.டி., படிக்க ஆசை உள்ளவர்கள்,ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, கணக்கு, இயற்பியல், வேதியியல், பாடங்களில் உள்ள அடிப்படை விஷயங்களைத் தெளிவாக புரிந்து கொண்டு, கற்றுக் கொள்ள வேண்டும். மனப்பாடம் செய்து, அப்படியே எழுதும் முறை எந்த விதத்திலும் உதவாது.
என்.சி.இ.ஆர்.டி., அங்கீகாரம் உள்ள பாடப் புத்தகங்களை முழுமையாக, தெளிவாக கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான், சரியான அடித்தளம். சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ.,பள்ளிகளின் பாடத்திட்டம், என்.சி.இ.ஆர்.டி., பரிந்துரைப்படிதான் உள்ளது. ஆனால்,மெட்ரிக் ஸ்டேட் போர்டு பள்ளிகளின் சிலபஸ் அப்படி இல்லை. நாட்டில், இந்த பள்ளிகளின் எண்ணிக்கை தான் அதிகம்.
அதனால், அங்கு படிக்கும் மாணவர்கள்,கூடுதல் பயிற்சிகள் எடுக்க வேண்டும். எந்த பாடத் திட்டமாக இருந்தாலும், பள்ளிக்கு வெளியேயும் சில முயற்சிகள் எடுக்க வேண்டும். பிளஸ் 1 வந்ததுமே, நல்ல கோச்சிங் மையத்தில் சேர்ந்து படிப்பது முக்கியம். காரணம், இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகியவற்றை, ஆசிரியர் துணையில்லாமல் செய்வது சிரமம். இதில் நெகட்டிவ் மதிப்பெண்ணும் இருப்பதால், இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன், படிக்கணும். ஐ.ஐ.டி.,கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, மகாராஷ்ட்ரா, ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து தான், அதிக மாணவர்கள் சேர்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து,குறைவானவர்கள் தான் வருகின்றனர். உலகின் பெரிய நிறுவனங்கள், ஐ.ஐ.டி.,மாணவர்களை வேலைக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டுவதால், அதில் தமிழக மாணவர்களும் இடம் பெற வேண்டும். திட்டமிட்டு உழைத்து, தினமும், சரியான நேரம் ஒதுக்கிப் படித்தால், 15 ஐ.ஐ.டி., நிறுவனங்களில், அனைவரும் திரும்பிப் பார்க்கும் சதவீதத்தில் தமிழ் மாணவர்களும் இடம் பிடிக்கலாம்.
No comments:
Post a Comment