இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து இந்த பதிவில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகள், முஸ்லிமல்லாத சகோதரி/சகோதரிகள் தங்களுக்குள்ளாக கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளாக இருக்கலாம். 

இந்த பதிவை படிக்கும் முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இந்த பதிவை நீங்கள் எந்தவொரு முன் முடிவுமின்றி படியுங்கள். பின்னர் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து குறித்து ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். இறைவன் உங்களுக்கு இந்த பயணத்தை எளிதாக்கி வைப்பானாக...ஆமீன். 

பதிவிற்குள் செல்வோம், 

1. தங்கள் சொத்துபத்துகளை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவற்றை அப்படியே விட்டு விட்டு நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்து சென்றனர் முஸ்லிம்கள்....இது அன்று நடந்த சம்பவம். 

"ஒன்று நீங்கள் இஸ்லாமை துறக்க வேண்டும், அல்லது உங்கள் குழந்தைகளை துறக்க வேண்டும்" என்ற இக்கட்டான கேள்வி ஆமினாஹ் அசில்மி அவர்களது விவாகரத்து வழக்கில் முன்வைக்கப்பட்டது. இருபது நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு, கனத்த உள்ளத்தோடும் கலங்கிய கண்களோடும் சகோதரி ஆமினாஹ் அசில்மி சொன்ன பதில் "என்னால் இஸ்லாத்தை துறக்க முடியாது"......இது இன்று நடந்த சம்பவம். 

இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையே இவர்களைப்போன்ற பலர் வந்து சென்றிருக்கலாம். 

  • ஒரு மார்க்கத்திற்காக, எதனையும் தியாகம் செய்ய இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றது? 
  • ஒரு மார்க்கம் இவர்களை இப்படி கட்டி போட்டிருக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம்?

2. சில வருடங்களுக்கு முன்பு (2007), பிரிட்டனில், முஸ்லிம் இளைஞர்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 

பிரிட்டனில், இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு வாழ விரும்புவதாக பெருவாரியான இளைஞர்கள் (40%) கருத்து தெரிவித்திருந்தனர். இது, அந்த கருத்துக்கணிப்பை நடந்தியவர்களை அதிர்ச்சியுற செய்தது. 

பொதுவாக, இளைஞர்கள் என்பவர்கள் ஜாலியாக இருக்க விரும்புபவர்கள் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கின்றது. அப்படியிருக்க, முஸ்லிம் இளைஞர்கள், கடுமையான சட்டதிட்டங்கள் என்று விமர்சிக்கப்படுகின்ற ஷரியத் சட்டத்திற்கு கீழ் வாழ விருப்பப்படுவது எதனால்? 

3. 30-40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், உலகளவில், ஹிஜாப் என்னும் ஆடை முறையை அணியும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேயே இருந்ததாக அறிகின்றோம். 

ஆனால் இன்றோ, அறுதிப்பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர். 

விஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ள இந்நாளில், முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் இந்நாளில், இயல்பாகவே, ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமென்பது ஹிஜாபை விமர்சிப்பவர்களின் பார்வையாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைக்கீழாக அல்லவா இருக்கின்றது? 

விஞ்ஞானம் அற்புத வளர்ச்சியை பெற்றுள்ள இந்நாளில் தான் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் விரும்பி ஹிஜாப் அணிகின்றனர். இது எதனால்?

4. மது அருந்த இஸ்லாம் தடை விதித்த போது, தாமதிக்காமல் தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்து நொறுக்கினர் முஸ்லிம்கள். அதுபோல, பெண்களின் ஹிஜாப் குறித்த கட்டளை வந்த போது, உடனடியாக, தங்களிடமிருந்த ஆடைகளை சிறு துணிகளாக கிழித்து, ஹிஜாபை பேணிக்கொண்டனர் பெண்கள். 

இன்றளவும் கூட, இஸ்லாமை சரிவர பின்பற்றும் ஒரு முஸ்லிம், தன்னுடைய கருத்தில் உறுதிப்பாடாக இருந்து, அதற்கு எதிரான கருத்தை குரானிலிருந்து எடுத்து காட்டினால் சட்டென்று தன் நிலையை மாற்றி கொள்வார். 

ஒருவருடைய பழக்கவழக்கங்களை திடீரென மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாம் எத்தனையோ சகோதரர்களை பார்த்திருப்போம், மது அருந்த மாட்டேனென்று, புகை பிடிக்கமாட்டேனென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் நடைமுறைப்படுத்த சிரமப்படுவார்கள்.

ஆனால், இஸ்லாம் கூறிய ஒரு கட்டளைக்கு அடிபணிந்து, தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்தெறிந்திருக்கின்றார்கள் என்றால், தங்களுடைய நீண்ட நாள் பழக்கத்தை ஒழித்துவிட நாடுகின்றார்கள் என்றால், அப்படி என்ன இருக்கின்றது இந்த மார்க்கத்தில்? 

ஒரு கட்டளை, ஒரு மனிதருக்குள் இந்த அளவு பாதிப்பை, மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்றால் இதற்கு என்ன காரணம்?     

5. நம் பதிவுலகில், இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற தளங்கள் உண்டு (இந்த தளங்களை நடத்துபவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் இளைஞர்கள் [17-18 வயது டீனேஜர்கள் கூட உண்டு]). இஸ்லாத்திற்காக இத்தனை உள்ளங்களா என்று நான் வியந்ததுண்டு. 

அழைப்பு தளங்கள் மட்டுமல்லாது, பொதுவான விஷயங்கள் குறித்து எழுதும் பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களும் இஸ்லாமிய வரையரைக்குட்பட்டே எழுதுகின்றனர். இஸ்லாம் குறித்த தகவல்களை தங்கள் தளங்களில் பார்வைக்கு வைத்தே இருக்கின்றனர். இவை மட்டுமல்லாமல், அவ்வப்போது இஸ்லாம் குறித்த கட்டுரைகளையும் பதிவு செய்தே வருகின்றனர்.

ஆக, பதிவுலகை பொருத்தவரை, பெரும்பாலான முஸ்லிம் பதிவர்கள் மார்க்கத்திற்கு உட்பட்டே செயலாற்றுகின்றனர். 

ஒரு விஷயம் குறித்து எழுதும் போது, இது இஸ்லாமிற்கு உட்பட்டு தான் இருக்கின்றதா என்று ஆராய்ந்து செயல்படுமளவு எப்படி ஒரு மார்க்கம் ஒருவருடைய அன்றாட வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றது?  

6. பெண்களை தவறாக நடத்தும் மார்க்கம் இஸ்லாம் என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால், இஸ்லாமை நன்கு ஆராய்ந்து, அதனை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்போரில் பெரும்பாலானவர்கள் பெண்களே. இது ஏன்? 

7. சென்ற ஆண்டு, கவனிக்கப்படதக்க ஆய்வொன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அமெரிக்க சராசரியை பொருத்தவரை, ஆண்களை விட பெண்களே இறைபக்தியில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்களை பொருத்தவரை, ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசமில்லாமல் இருபாலரும் இறைபக்தியில் சமமாகவே சிறந்து விளங்குகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், "உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?" என்ற கேள்விக்கு, எண்பது சதவித (80%) முஸ்லிம் அமெரிக்கர்கள் "ஆம்" என்று பதில் அளித்திருக்கின்றனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம். 

தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் கூறியிருந்தாலும், இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர். (2007ஆம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், வேறெதையும் விட இஸ்லாம் தங்கள் வாழ்வில் அதிமுக்கியமானது என்று 86% பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தெரிவித்திருந்தனர்).

  • எப்படி ஒரு மார்க்கம், ஆண் பெண் வித்தியாசமில்லாமல், ஒருவருடைய அன்றாட வாழ்வில் பின்னி பிணைந்திருக்கின்றது? 
  • இஸ்லாமை தவிர்த்து விட்டு, முஸ்லிம்களின் வாழ்க்கையை பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்க என்ன காரணம்?  

8. நிச்சயமாக முஸ்லிம்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு. இவை மார்க்கத்தை சரியான வழியில் பின்பற்றுவது குறித்த கருத்து வேற்றுமைகள். ஆனால், இஸ்லாத்திற்கெதிராக ஒரு நிகழ்வு நடந்தால் அதை ஒன்று சேர்ந்து சந்திக்கும் இவர்களது செயலாற்றல் அளப்பரியது. 

  • எதற்காக ஒரு மார்க்கத்தின் மீது இந்த அளவு பற்று வைத்திருக்கின்றனர்?
  • ஒரு மார்க்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்திக்கின்றதென்றால் அதற்கு என்ன காரணம்?     

9. மேலே பார்த்ததையெல்லாம் விட முக்கியமாக, இப்போது பார்க்கப்போகும் கருத்து ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியது. 

உலகில், ஒரு மார்க்கத்தின் மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதென்றால் அது இஸ்லாம் மீதாகத் இருக்க முடியும். உதாரணத்திற்கு, 1800-1950க்கு இடையேயான காலக்கட்டத்தில், சுமார் 60,000 புத்தகங்கள் இஸ்லாத்திற்கெதிராக எழுதப்பட்டிருந்ததாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

  • வரலாறு முழுக்க இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்திருக்கும் நிலையில், இவை, இஸ்லாத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லையே...ஏன்? 
  • வழக்கம் போல இஸ்லாம் தொடர்ந்து மக்களை கவர்ந்திழுத்து வருகின்றனதே...எப்படி? 

மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயம் நமக்குள்ளாக பிரதிபலித்து கொள்ளப்படவேண்டியவை. 

முஸ்லிம்கள் இப்படி கட்டுண்டு இருப்பதற்கு "நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றீர்கள்" என்பது போன்ற கருத்துக்கள் பதிலாகாது. 

அதுபோலவே, விஞ்ஞான முன்னேற்றங்களால் இஸ்லாத்தின் வீரியம் குறைந்து விடும் என்று எண்ணுவதும் அறியாமையின் உச்சமாகவே அமையும். 

முஸ்லிமல்லாத சகோதர/சகோதரரிகள் இந்த பதிவின் மையப்பொருள் குறித்து நன்கு சிந்தியுங்கள். "சரி, இவர்களை ஆட்டி வைக்கும் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறதென்று படித்து தான் பார்ப்போமே" என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், குர்ஆனை கேட்டு எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்புங்கள். குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை உங்களுக்கு (soft copy) அனுப்பி வைக்கின்றேன். 

படிப்பவர் புருவத்தை உயர வைக்கும் ஒரு குர்ஆன் வசனத்தோடு உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன். 

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு அருளியுள்ள(வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).

என்னவொரு அதிகாரத்தோரணை?

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.     

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

References:
1. ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி. link.
2. UK Muslim community statistics. link. 
3. முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு. link.
4. Between 1800-1950, 60,000 books written against Islam: The Times, dated 16th April 1979.

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ 

No comments:

Post a Comment